Skip to main content

சிறுமிகளைக் கடத்தி திருமணம்!!! வாலிபர்கள் கைது…

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

minor marriage youngster arrest

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகே உள்ளது எடுத்தவாய்நத்தம். இந்தகிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை தண்டலை கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை வயது 23 என்பவருக்கு பெண் கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டார் மகளுக்கு திருமண வயது இன்னும் வரவில்லை அதனால் தற்போதைக்கு திருமணம் செய்து கொடுக்கும் எண்ணம் இல்லை என்று கூறி மறுத்து கூறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அந்த சிறுமியை காணவில்லை. உறவினர் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன்பேரில் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பெண் கேட்டு வந்த சின்னத்துரை அவரது உறவினருடன் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாக சின்னத்துரை உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டோர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

 

இதேபோன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது புளி வெல்லம் கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமியை சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மகள் கிடைக்காததால் அந்த சிறுமியின் தாயார் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி மகன் யோகராஜ் வயது 31 என்பவர் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்ததாக தெரிய வந்ததையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் யோகராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

சிறுமிகளுக்கு எதிரான கட்டாய திருமணங்கள் நடப்பதும் அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதும், கட்டாய திருமணங்கள் நடக்காமல் தடுப்பதும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இது சம்பந்தமாக தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்