இந்த ஆண்டு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா தீர்மானம் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் தற்போது வரை தமிழக ஆளுநர் இந்த மசோதாவின் மீது முடிவு எடுக்கப்படாத நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவர் விரைவாக மசோதாவின் மீது முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங் தாமதமாகும் என கல்வியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஆளுநரின் இந்த தாமதப்படுத்தும் செயல்பாட்டிற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் அளித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா பற்றி முடிவெடுக்க மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என ஏற்கனவே அமைச்சர்களிடம் நான் தெரிவித்திருந்தேன். நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசனை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளா ர்.
அமைச்சர்களிடம் ஏற்கனவே ஆளுநர் தெரிவித்து இருந்ததாகக் கூறியிருக்கும் நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அக்டோபர் 24ஆம் தேதி 7.5 உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. ஆளுநருக்கு அரசியல்ரீதியாக அழுத்தம்தர அதிமுக அரசு தவறியதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஒரு மாத அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் கோருவது மசோதாவை நீக்க வழிகோலும் செயலாகும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும். ஆளுநர் அவகாசம் கோரியதை அமைச்சர்கள் குழு திட்டமிட்டு மக்களிடமிருந்து மறைத்து விட்டார்கள். 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 7.5 உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதாக ஆளுநர் கூறியதாக தகவல் வலம் வருகிறது. சமூகநீதியை சீர்குலைக்கிற அப்படி ஒரு கருத்து முன்வைக்கப்பட்டதா என அமைச்சர்கள் விளக்க வேண்டும். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் முதல்வர் ஏன் மவுனம் சாதிக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். மூன்று நான்கு வாரம் அவகாசம் தேவை என்றால் அதுவரை மருத்துவ கலந்தாய்வு நடத்தாமல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.