திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் இன்று (28.11.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை மற்றும் சேலை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் முழக்கங்களை எழுப்பினர். மேலும் தலையில் முக்காடு போட்டும் அமளியில் ஈடுபட்டனர்.
அதே சமயம் சொத்து வரி விதிப்பு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மட்டுமன்றி, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றைக் கட்டவில்லை எனில் அபராத வரி மற்றும் வாடகை கட்டடங்களுக்கு புதிதாக ஜிஎஸ்டி வரி எனக் கடுமையான வரி உயர்வுகளைப் பொதுமக்கள் தலையில் சுமத்தும் திமுக அரசைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்த திமுக மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றிக் கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஜனநாயக முறையில் அதிமுக கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.