தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திருச்சி, நாமக்கல், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாக, சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வேலைக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றிய பின் மின்விநியோகம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வசிக்கும் தெருவில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அவர் படகுடன் சாலையில் இறங்கிப் படகை ஓட்டிக்கொண்டே, "பொறந்தா தமிழ்நாட்டில பொறக்கணும், நல்லா சென்னையில தண்ணியில மெதக்கணும். பொறந்தா தமிழனாகப் பொறக்கணும், சென்னையில கார் ஓட்டி மகிழணும்..’ என்று பாட்டு பாடிக்கொண்டு, ‘இதுதான் வைகை ஆறு, இதுதான் காவிரி ஆறு, இதுதான் தாமிரபரணி, பாலாறு, தேனாறு, கொள்ளிடம் ஆறு, அனைத்து நதிகளும் வான் மழையென கொட்டுகிறார். பொறந்தா தமிழனாகப் பொறக்கணும்" என்று மீண்டும் கூறி சிரித்தார்.
இது தொடர்பான நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.