Skip to main content

மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய 'லைகா' நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

LYCA PRODUCTION CHENNAI HIGH COURT ORDER

 

'இந்தியன்- 2' படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்கக் கூடாது எனத் தடை விதிக்கக் கோரி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய, லைகா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்- 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

 

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன்- 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

 

அந்த மனுவில், 'படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிய நிலையில், 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும். இந்தியன்- 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்துத் தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், இதுவரை 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தத் தயாராக இருக்கிறோம்' என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இயக்குநர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்கக் கூடாது என ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். அதேசமயம் மனுவுக்கு பதிலளிக்க இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 15- ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

 

இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, அந்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி லைகா நிறுவனம் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (15/04/2021) விசாரணைக்கு வந்தது.

 

மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு தாக்கல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டனர்.


 

 

 

சார்ந்த செய்திகள்