கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, 5-ஆம் தேதி கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜ.க.வினர் 'ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு' என்று சொல்லி, ஒரு அட்டையைப் பொதுமக்களிடம் கொடுத்து, நூறு, இருநூறு, முன்னூறு ரூபாய் எனப் பணவசூல் செய்கிறார்கள். இந்த அட்டை செல்லாதது. ஏற்கனவே, தி.மு.க ஆட்சிக் காலத்தில் மறைந்த முதல்வர் கலைஞரால், 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' தொடங்கப்பட்டது. பிறகு, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அது 'அம்மா காப்பீட்டுத் திட்டம்' என மாற்றி, செயல்பாட்டில் இருந்துவருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க தலைவர்களின் படங்களைப் போட்டு, பொதுமக்களை ஏமாற்றி அட்டைகளை வழங்குகிறார்கள்.
பா.ஜ.க.வினர் திட்டமிட்டே மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடுகிறார்கள். ஏற்கனவே, தமிழகத்தின் நலனுக்கு எதிராக இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, தமிழர்களை எல்லா நிலைகளிலும் ஏமாற்றலாம் என மோசடி செய்கிறார்கள். அவர்கள் வழங்குகின்ற இது போன்ற ஏமாற்று அட்டைகளைப் பெறுவதற்கு பணம் கேட்டால், யாரும் கொடுக்க வேண்டாம். மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் நேரடியாக ஒரு மாநிலத்தில் செய்ய முடியாது. அந்தந்த மாநில அரசுகளுடன் சேர்ந்துதான் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இந்த 'மோசடி அட்டை' தொடர்பாக பா.ஜ.கவினர் யார் வந்தாலும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இதுபோன்ற போலி அட்டைகளை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வழங்குகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. அந்த அட்டையை வைத்து, எந்த மருத்துவமனையிலும் இலவசமாக, மருத்துவம் பார்க்க முடியாது. பா.ஜ.க செய்யும் நூதனக் கொள்ளையில் இதுவும் ஒன்று.
சென்ற அக்டோபர் 15-ஆம் தேதி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மொஞ்சனூர் ஊராட்சியில் உள்ள தொட்டம்பட்டி என்ற ஊரில், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின், போலி அட்டையை பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவரான அண்ணாமலை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்திய காவல்துறையில் பணிபுரிந்த, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான, படித்த அண்ணாமலையே, இப்படி ஒரு மோசடியான திட்டத்தை, அரசியலுக்காகச் செய்வது, பொதுமக்களை நம்பவைத்து ஏமாற்றும் துரோகச் செயலாகும்" என்றார்.