Skip to main content

உதவி வழங்க 1 மணி நேரம் மலையேறி சென்ற அமைச்சர்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020
The Minister who went on a trek for 1 hour to help

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்காவுக்கு உட்பட்டது நெக்னாமலை கிராமம். இந்த கிராமம் இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த கிராமத்தில் 100 குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்துக்கு சாலை வசதிகள் இல்லை. சாலை அமைக்க வேண்டும்மென்றால் வனத்துறை அனுமதி தரவேண்டும், பல ஆண்டுகளாக இம்மலை மக்கள் போராடியும் அனுமதி என்பது இன்னும் கிடைக்கவில்லை. இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட, அவரது உடலை டோலி கட்டி ஊரார் தங்களது கிராமத்துக்கு தூக்கி சென்றனர். இறந்தவரின் மனைவி 7 மாத கர்ப்பத்திலும் கணவன் உடலோடு மலையேறி சென்றார். அந்த படங்கள் வெளியாகி பெரும் வேதனையை ஏற்படுத்தியது. அந்த மக்களின் அவலம் குறித்து நக்கீரன் நேரடியாக அந்த கிராமத்துக்கு பயணமாகி செய்தி எடுத்து வெளியிட்டது.


இந்நிலையில் கரோனா ஊரடங்கால் மலை மீதுள்ள மக்களுக்கு எந்த வித நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் பணமும் இல்லாமல் சிரமப்பட்டனர். இதுப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் கவனத்துக்கு சென்றது. இதுப்பற்றி அதிமுகவினரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும், வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மே 21ந்தேதி அமைச்சர் வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மலையேறி அந்த கிராமத்துக்கு சென்றனர்.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான நடைப்பயணத்தில் மலையேறி நெக்னாமலை சென்று அக்கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள், நிவாரண பொருட்களை வழங்கினார்கள். அக்கிராம மக்கள், எங்களுக்கு சாலை வசதி மட்டும் செய்து தாருங்கள், அதுவே எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர். கரோனா முடிந்ததும் விரைவில் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சரும், அதிகாரிகளும் வாக்குறுதி தந்துவிட்டு வந்துள்ளனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்