விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் பழங்குடி இருளர் இன மக்கள் தாங்கள் குடியிருக்க வீடு கட்டித்தருமாறு கோரிக்கை வைத்தனர். செஞ்சி தொகுதியி தீவனூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ நிகழ்ச்சியின் போதும் பழங்குடி இருளர் இன மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான், கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தை இருளர் இன மக்களுக்கு வழங்கினார். இதற்காக நேற்று அவர் தனது மனைவியுடன் செஞ்சி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று அவருக்கு சொந்தமான நிலத்தை தமிழ்நாடு ஆளுநர் பெயருக்கு இலவசமாக எழுதிக்கொடுத்தார்.
இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான், பழங்குடியின மக்களுக்கு பட்டா கொடுப்பதற்கு ஏதுவாக கவர்னர் பெயருக்கு இடம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலம் சுமார் ரூ. 60 லட்சம் மதிப்பிலானது என்று கூறப்படுகிறது. அமைச்சரின் இந்த செயல் மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.