தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்ததும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மீதான மானியக் கோரிக்கை இன்று (13.04.2023) நடைபெற்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறையின் கீழ் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவில் இருந்து பார்க்கும்போது தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் ‘தமிழ்' என்ற வார்த்தை அமைப்பில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும்" என அறிவித்தார்.
மேலும், நீர்நிலை பாதுகாப்பில் சிறந்து பணியாற்றும் 100 நபர்களுக்கு நீர்நிலை பாதுகாப்பு விருது வழங்கப்படும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வாழும் வகையில் அதிக அளவில் இளம் மாணவர்களை தயார்படுத்த 50 பள்ளிகளில் 3.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைப் பள்ளிகள் திட்டத்தை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேவாங்கு பாதுகாப்பில் ஆராய்ச்சி மற்றும் சமூக பங்கேற்பை உறுதி செய்ய திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். உலக புகழ்பெற்ற ராம்சார் தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இயற்கை சூழலில் மெருகூட்டப்படும். தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.