தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று (20.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து துறைவாரியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
நேற்று காலை 10 மணியளவில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து அமைச்சர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவைக்கு வரத் தொடங்கினர்.
இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எதிர்க்கட்சி தலைவர்கள் சட்டப்பேரவைக்கு வரும் நுழைவுவாயில் வழியாக காலை 9.50 மணியளவில் வந்த போது, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அமரும் முன் வரிசையில் பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருக்கை அருகே அமர சென்றார். அப்போது எதிர்ப்பக்கமாக அமர்ந்திருந்த அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள் பொன்முடியின் செயலை குறிப்பிட்டு அவரை உரிய இருக்கைக்கு வந்து அமர சொன்னார்கள். உடனே தனது செயலை சுதாரித்து கொண்ட அமைச்சர் பொன்முடி தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சிரித்தபடியே வந்து அமர்ந்தார். இதனால் சட்டப்பேரவையில் சில நிமிடங்கள் சிரிப்பலை எழுந்தது.