புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஏராளமானவர்கள் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்காக குழு அமைத்து கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டி வகுப்பறைகளை சீரமைத்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளனர். இதனைப் பார்த்த ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர். இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு அந்தப் பள்ளியின் செயல்பாடுகளைப் பாராட்டியதோடு முன்னாள் மாணவர்கள் அந்தப் பள்ளி வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஆலங்குடி தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் அதிகம் உள்ளனர். அதேபோல கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி விகிதமும் முன்னாள் மாணவர்களின் செயல்பாடும் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் மேம்பாடு அடையும்போது அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். எந்த ஒரு சூழலிலும் கல்வியை கற்றால் எதையும் சாதிக்கலாம்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் நாம் பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் பயன்படுத்தினோம். இப்போது பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் நீக்கப்பட்டு படித்த படிப்பின் பட்டங்களை பயன்படுத்துகிறோம். இந்த மாற்றத்திற்கு நாம் கற்ற கல்வி தான் காரணம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர். அதனால் அதிகமானோர் கல்வி கற்க காரணம். எப்போதும் அப்படிப்பட்ட கல்வியை நாம் மறந்துவிடக்கூடாது.
நான் தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் சூழலில் மெய்யநாதன் என்ற பெயருக்கு பின்னால் இடம் பெற்றுள்ள MCA என்ற படித்த பட்டம் தான் உலக அளவில் எனக்கு பெயரையும், மதிப்பையும், அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது. அதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அதேபோல் மாணவர்களும் கல்வி கற்பதில் அதிக ஆர்வமுடன் செயல்பட்டு பெயருக்கு பின்னால் தாங்கள் படித்த பட்டங்களை போடுவதை பெருமையாக கருத வேண்டும்” என்றார்.