தற்போது ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சரவை என்பது மாற்றப்பட்டு இருந்தாலும் எந்த அமைச்சரும் விடுவிக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு புதிதாக அமைச்சரவை பட்டியலில் செங்கோட்டையன் சேர்க்கப்பட்டிருந்தார். அதனையடுத்து யாருமே மாற்றப்படாத நிலையில், முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதிலிருந்து முதல் முறையாக ஒரு அமைச்சர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேட்டி அளித்திருந்தார். இதன் காரணமாக தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளாரா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. தற்போது மணிகண்டன் வகித்துவந்த தொழில்நுட்பத்துறைக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஆர்பி .உதயகுமார் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.