7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வந்த பிறகே மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "7.5% உள் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனுமதி கொடுப்பதாக ஆளுநர் கூறினார். ஆளுநரின் பரிசீலனையில் இருக்கும் மசோதாவிற்கு, அரசால் அழுத்தம் மட்டுமே கொடுக்க முடியும், கையெழுத்திடுமாறு நிர்பந்திக்க முடியாது. ஒரு அறைக்குள் நடந்த விவாதத்தை வெளியில் சொல்ல முடியாது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை. தி.மு.க போராட்டத்தால் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது எனக் கூறி பெயர் எடுக்கப் பார்க்கிறார் ஸ்டாலின். 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வந்த பிறகே மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். குரூப்- 4 பாடத்திட்டம் மாற்றப்படாது; பழைய நிலைதான் தொடரும்" என்றார்.