![PUDUKOTTAI](http://image.nakkheeran.in/cdn/farfuture/kS2VRhl6uR9-lkObhA5RFzsjMDigI_nji0mRW1eCX0M/1595770739/sites/default/files/inline-images/azcdszadfsd.jpg)
இந்தியா முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் பேரை கடந்துவிட்டது. தொடக்கத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அரசு மருத்துவமனைகளில் அதிக கவனிப்புகள் இருந்தது. தற்போது எந்த வசதியும் இல்லை, கவனிப்புகள் குறைவாக உள்ளது. கழிவறை, தண்ணீர் பிரச்சனை உள்ளது என்று தமிழகம் முழுவதும் போர்குரல் எழுந்தது போல அமைச்சர் விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டத்திலும் எழுந்தது.
வார்டுகளில் இருந்து சொல்வதை படங்களுடன் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அனைத்தும் சீர் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அடுத்த நாளே மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியை ஆய்வுக்கு அனுப்பி உணவு தரம் கண்டறியப்பட்டது. குடிதண்ணீர் பிரச்சனையை போக்க அனைவருக்கும் அம்மா குடிநீர் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த செலவில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் ஜூஸ், மற்றும் காபி வழங்கி வருகிறார். மேலும் அமைச்சர் சொன்னார் என்று மூன்றாயிரம் தண்ணீர் பாட்டில்களும் இறக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 2 பாட்டில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை வராமல் தடுக்க நகராட்சி சார்பில் ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் காவிரி குடிநீர், டேங்கர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை மையங்களில் உள்ள குறைகள் அமைச்சரின் கவனத்திற்கு சென்ற பிறகு ஓரளவு சரி செய்யப்பட்டு வருவதாக கிசிச்சையில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.