தன்னைச் சந்தித்து கோரிக்கைகள் வைக்கவரும் ஆசிரியர்களை காக்க வைக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘ஆசிரியர் மனசு திட்டம்’ எனும் புதிய திட்டத்தை அறிவித்தார். இந்த ‘ஆசிரியர் மனசு திட்டம்’ கடந்த மாதம் கோயம்புத்தூரில் அறிவிக்கப்பட்டு அங்கு செயல்படத் தொடங்கியது.
அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்திலும், அலுவலகத்திலும் ‘ஆசிரியர் மனசுப் பெட்டி’ வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் நேரில் வராமலும் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க aasiriyarmanasu@gmail.com aasiriyarkaludananbil@gmail.com எனத் தனியே இரு மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான தனி அலுவலகம் ஒன்றை அமைத்து, தனது நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் வகையில் திருச்சியில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் ஆசிரியர் மனசு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை இன்று 08.09.2022 வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.
இந்த அலுவலகத்தில் ஆசிரியர் மனசு மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற அனைத்து குறைகள் மற்றும் பிரச்சினைகளும் தொகுக்கப்பட்டு, பள்ளிக்கல்வி அமைச்சரால் உரிய அலுவலர்கள் வழியாக தீர்வு காணப்படும் வகையில் திட்டம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.