மேட்டூர் அருகே மரங்கள், கற்கள் கடத்திச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலித்ததாக வந்த புகாரின் பேரில் வனக் காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேட்டூர் வனச்சரகத்தில் பிரான்சிஸ் என்பவர் வனக் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது, கொளத்தூர் வனத்துறை சோதனைச் சாவடியில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர் மீது, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அடிக்கடி புகார்கள் சென்றன. அதன் பேரில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு திடீரென்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கொளத்தூர் சோதனைச் சாவடி வழியாக கர்நாடகா மாநிலத்திற்குச் செல்லும் வாகனங்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து மேட்டூர் வழியாகச் செல்லும் வாகனங்களில் அனுமதியின்றி மரங்கள், உளி கற்கள் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலிப்பதாக பிரான்சிஸ் மீது புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்ததன் பேரில்தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.