![Merchants asked government to open Sunday market!](http://image.nakkheeran.in/cdn/farfuture/sbjouzB-nbkP8LLw0meAkFJomDsYHUnj6F2BDOdXbv8/1600076524/sites/default/files/inline-images/pondy_30.jpg)
1970-ஆம் ஆண்டுகளில் இருந்து அரை நூற்றாண்டு காலமாக சன்டே மார்க்கெட் புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது. அதிலும் காந்தி வீதியில் சன்டே மார்க்கெட் என்பது இயற்கையாக உருவானதாகும். இவர்கள் இங்கு வியாபாரம் செய்வதற்கு நகராட்சியின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அடிக்காசும் வசூலிக்கப்பட்டு வருகிறது. சன்டே மார்க்கெட்டில் விற்கக்கூடிய பொருட்கள் குறைந்த விலைக்கும், நியாயமான விலைக்கும் கிடைப்பதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் இங்கு விற்கக்கூடிய பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகிறார்கள்.
அதேசமயம் சன்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் வேறு வகையான வாழ்வாதாரம் எதுவுமின்றி இதனை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி பொருட்களை வாங்கி வைத்து வியாபாரம் செய்பவர்களாக இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி கடந்த ஆறு மாத காலமாக சன்டே மார்க்கெட் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இதனை நம்பியுள்ள சன்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு, இவர்களுடைய குடும்பங்கள் எந்தவிதமான வருமானம் இன்றி, பசியும் பட்டினியுமாக இருந்து வருகிறார்கள். அரசும் இவர்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை. இந்த நிலையில் சன்டே மார்க்கெட் தொடர்ந்து காந்தி வீதியிலேயே செயல்படுவதற்கும், கடைகளை திறப்பதற்கும் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பத்துக்கும் மேற்பட்ட முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை சன்டே மார்க்கெட் திறப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நாடு முழுவதும், புதுச்சேரியிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, அனைத்து வகையான கடைகளும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றி சன்டே மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் பொருட்களை கொண்டு வியாபாரம் செய்யும் போராட்டம் நடைபெற்றது.
இவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். இப்போராட்டத்திற்கு சன்டே மார்க்கெட் சங்க தலைவர் B.பாபு, செயலாளர் துரை.செல்வம் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி மாநில செயல் தலைவர், மாநில பொதுச்செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சன்டே மார்க்கெட் சங்க நிர்வாகிகள் உட்பட சன்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.