தமிழ்நாடு முழுவதும் நேற்று (13.09.2021) சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார், தனது 70 வயது தாயார் கண்ணாம்மாவுடன் முகாமுக்கு வந்தார். அவர், அங்கிருந்த சுகாதாரத்துறை ஊழியர்களிடம், “எனது தாயாருக்கு சொந்த ஊரான விட்டலாபுரத்தில் நடந்த சிறப்பு முகாமில் மூன்றாவது முறையாக கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்படுமா?” என்று விளக்கம் கேட்டுள்ளார்.
அப்போது அங்கு கரோனா சிறப்பு முகாமை பார்வையிட வருகை வந்த மாவட்ட ஆட்சியர் மோகனிடம், “ஏற்கனவே என்னுடைய தாயாருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசியைக் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஏரி பராமரிப்பு வேலைக்காகச் சென்றபோது சுகாதாரத்துறையினர் போட்டுள்ளனர். நேற்று காலை நான் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது எங்கள் ஊரில் கரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன்பொருட்டு அவர் அருகில் நடைபெற்றுக்கொண்டிருந்த கரோனா முகாமை, பொது மருத்துவ முகாம் என எண்ணி அங்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், அவர் ஏற்கனவே கரோனா தடுப்பூசி எத்தனை முறை போட்டுள்ளார் என்பது குறித்து விசாரிக்காமல் அவருக்கு மூன்றாவது முறையாக கரோனா தடுப்பூசி போட்டு அனுப்பிவிட்டனர். இதுகுறித்து எனக்குத் தகவல் கிடைத்தவுடன் அந்த முகாமுக்குச் சென்று ஊசி போட்ட அவர்களிடம் விவரம் கேட்டபோது, திண்டிவனத்திற்குச் சென்று அங்குள்ள அரசு மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளுமாறு கூறி அனுப்பிவிட்டனர். அதனால் விபரம் கேட்க நான் இங்கே வந்துள்ளேன்” என கூறியுள்ளார்.
இதனைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், முகாமில் இருக்கும் மருத்துவ அதிகாரியிடம் சென்று விளக்கம் கேட்குமாறு சிவகுமாரை அனுப்பியுள்ளார். முகாமிலிருந்த மருத்துவ அதிகாரி, சிவகுமாரின் தாயாரை பரிசோதித்து, “உங்கள் தாயாருக்கு தற்போது உடல்நிலை நன்றாக உள்ளது. எனவே, அவரது உடல்நிலையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனடியாக எனக்கு ஃபோன் செய்யுங்கள்” என கூறியுள்ளார். மேலும், சிவகுமாரிடம் தனது மொபைல் எண்ணைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.