சமீபத்தில் நடந்து முடிந்த டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன் இன்று (03/01/2022) தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது. போராட்டம் நடத்தியவர்கள் விதிமீறல் தொடர்பாக எந்த மனுவும் கொடுக்கவில்லை. கரோனா காலம் என்பதால் கூடுதலாக இரண்டு விதிகள் என 68 விதிகள் அடிப்படையில் பார் டெண்டர் விடப்பட்டது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் நடத்த வசதியுள்ள 1,550 கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக கடைபிடிக்கப்படும்.
விதிமுறைகளைக் கடைபிடித்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தவர்களுக்கு டெண்டர் விடப்படும். எந்த இடங்களில் விண்ணப்பங்களை வாங்க மறுத்தார்கள்? என சொல்லுங்கள். எந்த கட்சியையும் பார்த்து டெண்டர் விடவில்லை; வெளிப்படையாக நடக்கிறது" எனத் தெரிவித்தார்.