விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வியியல் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளிகளில் உற்று நோக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று கல்வியியல் இளங்கலை இறுதியாண்டு மாணவிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட சில மாணவிகள் நேற்று மதியம் 2 மணி அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், தங்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் ஒருவர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை பார்த்து அதிர்ச்சியடைந்த முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, உடனடியாக இதுகுறித்து உரிய விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவில் மாணவிகள் கொடுக்கப்பட்டுள்ள புகார் உறுதியானால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.