விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது மேல்மலையனூர். இங்குள்ள அங்காளம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நள்ளிரவின்போது, இக்கோயிலில் நடைபெறும் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தைக் காண்பதற்காக தமிழகத்தில் மட்டுமல்ல புதுவை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக அரசு தடை உத்தரவு போட்டிருப்பதால் கடந்த 5 மாதமாக அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த 7ஆம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேற்று ஏழாம் தேதி மகாளய அமாவாசை என்பதாலும், மிகச் சிறப்பான நாள் என்பதாலும், அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தைக் காண்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் மேல்மலையனூர் நோக்கி ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் காலை முதல் இரவு வரை வந்தவண்ணம் இருந்தனர். இப்படி மேல்மலையனூருக்கு வரும் பல வழிகளிலும் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து கோவிலுக்கு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர். கூட்டம் அதிகளவில் வந்ததால், போலீசாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள்.
மேல்மலையனூர் ஈயங்குணம் பிரிவு சாலையில், ஒரு காரில் கோவிலுக்கு வந்த நான்கு பக்தர்களை அங்கு பணியில் இருந்த ஏட்டு அய்யனார், போலீஸ்காரர் அய்யனார் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். குடிபோதையில் இருந்த அந்த நான்கு பேரும், எங்கள் காரை மட்டும் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் போலீசாரை அவர்கள் நால்வரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இரு போலீசாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்ததும், வளத்தி போலீசார் அங்கு விரைந்துவந்து காயமடைந்த போலீஸ்காரர்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தாக்கிய நால்வரில், மூன்று பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதில் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், அயப்பாக்கம் சேட்டு, மேல்மலையனூர் இளங்கோ ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய மேலும் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். போலீசார் தாக்கப்பட்ட இச்சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.