தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள ஓமவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, விவசாயக் கூலி வேலைசெய்து வருகிறார். இவரது வருமானம் குடும்பச் செலவுகளுக்கே பற்றாக்குறையாக உள்ளது. கஜா புயலில் சேதமடைந்த வீட்டைக் கூட சீரமைக்க முடியாமல் தார்ப்பாய் போட்டு போர்த்தி வைத்திருக்கிறார். குடும்ப வறுமையை நினைத்து வறுமையைப் போக்க, தான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்ட அவரது மகள் அபிநயா, கொன்றைக்காடு அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பில் 344 மதிப்பெண் பெற்று, குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் +1, +2 படித்து 503 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றார்.
நல்ல மதிப்பெண் எடுத்திருப்பதால் உனக்குக் கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஆசிரியர்களும் நண்பர்களும் சொல்ல, அவர் விண்ணப்பித்தார். சில நாட்களுக்கு முன்பு கலந்தாய்வுக்கு அழைப்பு வந்தது. கலந்தாய்வுக்குச் செல்ல பணம் இல்லை. பக்கத்தில் உள்ளவர்களிடம் வட்டிக்கு ரூ.2 ஆயிரம் கடன் வாங்கிக் கொண்டு கலந்தாய்வுக்குச் சென்றவருக்கு சென்னை வேப்பேரி கால்நடைக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஜனவரி 13ஆம் தேதிக்குள் கல்லூரியில் ரூ.20 ஆயிரம் செலுத்தி சேர்க்கை செய்துகொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சேர்க்கைக் கட்டணம் செலுத்த வசதியின்றி இன்னும் சேர்க்கைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவி, தனது படிப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என்ற கவலையில் உள்ளார்.
இது குறித்து மாணவி அபிநயா நம்மிடம், “குடும்ப வறுமையை நினைத்துப் படித்தேன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கி இப்போ கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் அட்மிஷன்கூட போடாமல் இருக்கிறேன். கலந்தாய்வுக்கு கூட வட்டிக்குப் பணம் வாங்கிட்டுப் போனோம். இப்போ ரூ.20 ஆயிரம் கட்டி அட்மிஷன் போடனும். அதுக்கு என்னிடம் பணம் இல்லை. அடுத்து மெஸ் பில், புத்தகம் வாங்க என்று பல ஆயிரங்கள் தேவைப்படும். ஆனால், எங்களிடம் பணம் பெரிய தடையாக உள்ளதால், இடம் கிடைத்தும் படிப்பைத் தொடர முடியாமல் போகுமோ என்று அச்சப்படுகிறேன். அரசுப் பள்ளியில் படித்து இவ்வளவு தூரம் வந்த பிறகு பணத்தால் படிப்பு போய்விடுமோ" என்று கண்கலங்கினார்.
ஏழை மாணவர்களின் படிப்பிற்காக உதவ எத்தனையோ நல்ல உள்ளங்கள் காத்திருக்கிறார்கள். அப்படியான நல்ல உள்ளங்கள் மாணவி அபிநயாவின் கல்விக்கு உதவினால், அவரது கனவு நினைவாகும். இல்லை என்றால், ஏழை மாணவியின் கனவு கனவாகவே போகும்.