நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மன்னர் பூலித்தேவர், தளபதி ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துகோன் உள்ளிட்ட தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான வீர வணக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார்.
முதலில் மூன்று சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் வீர வணக்கம் செலுத்திய சீமான் பூலித்தேவர், தளபதி ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துகோன் உள்ளிட்ட மூன்று பேரின் வரலாறும் மறைக்கப்பட்டுவிட்டது என ஆரம்பித்தார். மேலும் தற்போதைய நிலவரத்தை பேசிய சீமான் விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்விட்டது அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலைகள் என்றும் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது ஆனால் வெளிநாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 34 ரூபாய்தான். தமிழகத்தின் கனிம வளங்கள் கார்ப்ரேட்டுகளால் சுரண்டப்படுகின்றன.
நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வுகள் வர வேண்டும் இவ்வாறு சீமான் பேசிக்கொண்டிருந்தபோது இரவு மணி 10-ஐ தாண்டியது. அப்போது போலீசார் நேரம் கடந்து பேசியதை நினைவுறுத்தினார்கள். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. காவல் துறையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சிறிது நேரம் கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் சீமான் தன் உரையை சில நொடிகளில் நிறுத்திக்கொண்டார்.