
வார்த்தைக்கு வார்த்தை இது 'அம்மாவின் அரசு', 'அம்மா வழிநடத்தும் அரசு' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேடைகளில் முழங்கினாலும், அவருடைய தொண்டரடிப்பொடியாழ்வார்கள், கட்-அவுட்களில் கூட ஜெயலலிதா படங்களை வைக்காமல் புறக்கணித்திருப்பது ஜெ., விசுவாசிகளிடையே பெருத்த அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 26ம் தேதி இரவு சேலம் வந்தார். நாளை (ஏப்ரல் 29) காலை 10 மணியளவில், சேலம் அண்ணா பூங்கா நுழைவு வாயில் முன்பு,ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட பூமி பூஜை விழா நடக்கிறது.

இதையொட்டி, சேலம் அண்ணா பூங்கா முதல் புதிய பஸ் நிலையம், 5 ரோடு, 3 ரோடு பகுதிகளில் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள், விளம்பர தட்டிகளை சாலையின் இருபுறங்களிலும், செண்டர் மீடியன்களிலும் அதிமுகவினர் வைத்துள்ளனர்.
கட்-அவுட் கலாச்சாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்த ஜெயலலிதாதான், கடந்த 2011ல் ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு விழாக்களில் ஆடம்பரம் கூடாது என்று மிகக் கவனமாக தவிர்த்து வந்தார்.
அதையும் மீறி அவருடைய விசுவாசிகள், அரசு விழாக்களின்போது ஜெயலலிதா செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாழைத்தோப்பையே கொண்டு வந்து நிறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
ஜெயலலிதா இருந்தபோது எப்படியோ இப்போதும் அவருடைய ஆடம்பர கலாச்சாரத்தை எடப்பாடி பழனிசாமியும் பின்பற்றுகிறார். சேலத்தில் எந்த ஒரு அரசு விழா என்றாலும் வழி நெடுகிலும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்து, விதிகளை மீறி கட்-அவுட்டுகள் வைப்பதை நடைமுறையாக்கி இருக்கின்றனர் ர.ர.க்கள்.
''தமிழகத்தில் அதிமுக தவிர்த்த வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை தனது கோட்டையாக இருக்க வேண்டும் என்பதில் எடப்பாடியார் ஆர்வம் காட்டுவதாகவும், அதனால் தன் முகத்தை எப்போதும் லைம்லைட்டில் வைத்திருக்கும்படி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்,'' என்கிறார் முகம் காட்ட விரும்பாத அதிமுக நிர்வாகி ஒருவர்.
இன்று சேலத்தில் வைக்கப்பட்டு உள்ள பல கட்&அவுட்டுகளில் எம்ஜிஆர் படம் அச்சிடப்பட்டு உள்ளது. அதேநேரம் ஜெயலலிதா படம் ஒரு மூலையில் பெயரளவுக்கு சிறியதாகவும், பல கட்&அவுட்களில் ஜெயலலிதா படம்கூட இல்லாமலும் வைத்துள்ளனர். இத்தனைக்கும், ஜெயலலிதா இல்லாத அந்த கட்-அவுட்களை அம்மா
பேரவையினரே வைத்துள்ளதுதான் ஆகப்பெரிய வேடிக்கை என்கின்றனர் எடப்பாடியின் அதிருப்தியாளர்கள்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் தனித்தனி கட்&அவுட்களை வைத்து அழகு பார்த்துள்ள தொண்டர்கள், அதிலும் கட்சி நிர்வாகிகள் படங்களை அச்சிட்டுள்ளார்களே தவிர, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை புறக்கணித்துள்ளனர்.
தேர்தல் நெருக்கத்தில் மட்டும் எம்ஜிஆரின் பெயரை ஜெயலலிதா அதிகமாக பயன்படுத்துவார் என்பதும், மேடைகளில் மட்டுமே 'அண்ணா நாமம் வாழ்க', 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க' என்று முழங்குவாரே தவிர, ஆட்சிக்காலத்தில் எல்லாம் எப்போதுமே, 'நான்... நான்... நான்...' மட்டுமே என்று நிர்வாகத்தை செலுத்தியவர் ஜெயலலிதா.
இப்போது அவருடைய பாணியிலேயே, மேடைகளில் மட்டும் 'இது அம்மாவின் அரசு' என்று ஜோடனையுடன் பேசும் எடப்பாடியார், கட்-அவுட்டுகளில் வசதியாக மறந்து போனார்.
மூச்சுக்கு முன்னூறு முறை, 'அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம்,' எனக்கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் அனைவருமே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை ஏனோ ஏற்க மறுக்கிறார் என புலம்புகின்றனர் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
இதுவும் கடந்து போகும் என்பதை அறியாதவர் அல்ல எடப்பாடி பழனிசாமி.
- சேலம் எஸ். இளையராஜா