தொண்டு நிறுவனங்கள் கஜாபுயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பொருளாக வழங்கியதை, திருக்குவளை தாசில்தார் தனது சொந்தத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்த கஜாபுயல் வேதாரணியம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை பேரழிவுக்கு உட்படுத்தி விட்டு சென்றது. அதிலிருந்து இன்னும் மீளாத்துயரில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். ஏராளமான வீடுகளும், மரங்களும் சாய்ந்து மக்களின் வாழ்வாதாரத்தையே முடக்கிப் போட்டது.
இந்தசூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் அறிவித்தது. அது முழமையாக பலருக்கும் கிடைத்திடவில்லை. அதேபோல் தனியார் தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும், மாணவர்களும், தாமாகவே முன் வந்து தங்களால் முடிந்த உதவிகளை ஓடிவந்து செய்தனர்.
இந்தநிலையில் நாகை மாவட்டம் திருக்குவளைக்கு ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் 1200 ரூபாய் மதிப்பில் 700 குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்காமல் திருக்குவளை தாசில்தார் தனது சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொண்டதாக வால்போஸ்டர் தாலுக்கா முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது.
இந்த வால்போஸ்டரில், திருக்குவளை தாசில்தார் ஶ்ரீதேவியை வன்மையாக கண்டிக்கிறோம் என தலைப்பிட்டு. கஜாபுயலால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கு வீடு இழந்தவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் 700 பேருக்கு வழங்கிய விலை உயர்ந்த நிவாரணப் பொருட்களை தாசில்தார் ஸ்ரீ தேவி கார், வேன் வைத்து அவரது சொந்த உபயோகத்திற்காக திருடி சென்றதை வன்மையாக கண்டிக்கிறோம். மாவட்ட நிர்வாகமே ஏழை எளியோருக்கு அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை திருடி சென்ற தாசில்தார் ஸ்ரீதேவி மீது நடவடிக்கை எடு.
இப்படியொரு போஸ்டர்கள் திருக்குவளை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அப்பகுயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.