தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில், தனது கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மக்கள் ஒரு வேட்பாளரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், தன் கணவரின் வருமானத்தை மறைத்தது தவறு என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தாக்கல் செய்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனது உத்தரவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என தெரிவித்த நீதிபதி, தனது வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென்ற கனிமொழியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும்.