Skip to main content

“ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்” - வானதி சீனிவாசன் காட்டம்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

 

"Maridas should be released immediately" - Vanathi Srinivasan MLA Insistence!

 

சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் பதிவிட்டு வந்த யூடியூபர் மாரிதாஸ், நேற்று (09/12/2021) பிற்பகல் 01.00 மணியளவில் அவரின் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க  நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், மாரிதாஸ் கைது பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக, அவர் இன்று (10/12/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கு ஏற்பட்ட இந்த பெரும் சோகத்தை கொண்டாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 

 

ஆனால், தமிழகம் காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் மாரிதாஸை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. மாரிதாஸை அவசர அவசரமாக கைது செய்த காவல்துறையினர், முப்படை தலைமை தளபதி மரணத்தைக் கொண்டாடியவர்களையும், நமது ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டவர்களையும் கைது செய்யவில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மட்டுமல்ல, பிரிவினை வாதம் பேசுபவர்கள் மீது எப்போதுமே தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இது, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்ற மாரிதாஸின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

 

தி.மு.க.வின் கொள்கைகளையும், தி.மு.க. அரசின் செயல்பாடுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ். இந்தப் பின்னணியில் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 'கருத்துச் சுதந்திரம்' பற்றி அதிகமாக பேசும் கட்சி தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதரிப்பவர்களுக்கு மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. தங்களை எதிர்க்கும் குரலை ஒடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான, கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். மாரிதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்