கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குட்டப்பட்டியில் மாடு மற்றும் குதிரை ஆகியவற்றிற்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாடுகள் மற்றும் குதிரைகளுக்கு ரொக்கம், பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வைகைநல்லூர் பஞ்சாயத்து குட்டப்பட்டியில் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் 8வது ஆண்டாக நடைபெற்றது. குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கரூர், திருச்சி, தஞ்சை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. எல்கை பந்தயத்தில் ஒற்றை மாடு, இரட்டை மாடு, புதுக்குதிரை, சின்ன குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை எனப் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் கலந்து கொண்ட மாடுகள் மற்றும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்ததை ஏராளமானோர் கண்டுகளித்தனர். போட்டியைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.