'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை கோயம்பேட்டில் நேற்று காய்கறிகளின் விலை 30 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆனால், வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை மட்டும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மொத்த காய்கறிகள் சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை சரிந்து வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், 'மாண்டஸ்' புயல் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை நேற்று 30 சதவீதம் உயர்ந்து. நேற்று பீன்ஸ் கிலோ 30 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும், கேரட் விலை கிலோ 35 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும் உயர்ந்தது. கத்திரிக்காய் கிலோ 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும், பாகற்காய் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று முன்தினம் கிலோ 12 ரூபாய்க்கு தக்காளி விற்பனையான நிலையில் நேற்று கிலோ 18 ரூபாய்க்கு தக்காளி விற்பனையானது. இந்நிலையில், இன்று மேலும் விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் நேற்றைய விலையை விட 5 சதவிகிதம் உயர்ந்து விற்பனையாகிறது.