![Mandela's film censorship committee fails to censor Barbers' Association petition](http://image.nakkheeran.in/cdn/farfuture/RBVMtslAQrwfqAtU_iO8Q1NTKNNm6xwEZjqGiy3VMFg/1618988482/sites/default/files/inline-images/high-court-order-3_3.jpg)
மண்டேலா பட மறு தணிக்கை செய்யக்கோரும் வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யபட்ட மனுவில் “மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்ததாகும். காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைபடம் ஏப்ரல் 4ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.
இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பதும், காரில் ஏற அறுகதை இல்லை என காரின் பின்னே ஓடி வர சொல்வதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை தணிக்கை குழு தணிக்கை செய்ய தவறி விட்டதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டும். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குனர் மடோனே அஸ்வின் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.