சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி கடந்த 2002 ஆம் ஆண்டு மீதிகுடி ரோடு பகுதியில் உள்ள ஏ.வி. பைனான்ஸ் உரிமையாளர் வெங்கடேசன் என்பவரிடம் ரூ. 22 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் தமிழ்ச்செல்வி இதுவரை வட்டியும் அசலுமாக ரூ. 79 ஆயிரம் வரை கட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி வெங்கடேசன் மற்றும் அவரிடம் பணி புரியும் சபரி ஆகிய இருவரும் தமிழ்ச்செல்வி வீட்டிற்குச் சென்று இதுவரை ரூ. 40 ஆயிரம் மட்டுமே கட்டி உள்ளதாகவும் மீதி 60 ஆயிரம் கட்ட வேண்டும் எனவும் அதனை மாதம் ரூ. 3 ஆயிரமாக கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது தமிழ்ச்செல்வியை இவர்கள் ஆபாசமாக பேசியுள்ளார்கள். இதனால் மன வேதனை அடைந்த தமிழ்ச்செல்வி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் கந்துவட்டி கேட்டு மிரட்டிய வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சபரி என்பவரை தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வெங்கடேசன் பைனான்ஸ் அலுவலகத்தில் வைத்திருந்த பலர் கையெழுத்திட்ட வெற்று பத்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிதம்பரம் பகுதியில் கந்துவட்டியால் பல்வேறு பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.