![Male police arrested for misbehaving with female police officer](http://image.nakkheeran.in/cdn/farfuture/3o22MWVup4CjYGWEIgkIFch0qrEysHwsr1EX6vZPzFM/1690278879/sites/default/files/inline-images/997_188.jpg)
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் 24 வயது இளம்பெண் ஒருவர் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அந்தப் பெண் காவலர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருவாரூரில் இருந்து தஞ்சாவூருக்குப் பணி நிமித்தமாகச் சென்றிருக்கிறார். அங்கு காலை 10 மணியளவில் சென்றடைந்த பெண் காவலர், தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் திருவாரூருக்குப் பேருந்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அவருடன் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலரான சற்குணம் என்பவர், அந்தப் பெண் காவலரைப் பேருந்து நிலையத்தில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பெண் காவலரை உடனடியாகச் செல்போனில் தொடர்புகொண்ட சற்குணம், “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்..” எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு பேருந்தில் செல்வதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், சற்குணம் அந்தப் பெண் காவலரிடம், “நீங்கள் கொரடாச்சேரி பஸ் ஸ்டாண்டுல இறங்கிடுங்க. நான் பக்கத்துல தான் இருக்கேன். நான் என்னோட பைக்குல உங்கள பத்திரமாக சேர வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போயி விடுறேன்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட பெண் காவலர் ஆரம்பத்தில் சிறிது தயக்கம் அடைந்துள்ளார். அதன்பிறகு, அவர் நம்முடன் வேலை செய்பவர் தானே என்ற நம்பிக்கையில் கொரடாச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த சற்குணத்துடன் அந்தப் பெண் காவலர் டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அவர்கள் கொரடாச்சேரியில் இருந்து திருவாரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அந்த நேரத்தில், சற்குணத்தின் பேச்சில் சில வித்தியாசங்கள் தெரிந்துள்ளது. இதனால் அந்தப் பெண் காவலருக்குச் சற்குணம் மீது திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இவர்கள் கொரடாச்சேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டலை கிராமம் அருகே சென்றபோது அந்தப் பெண் காவலரிடம், சற்குணம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
![Male police arrested for misbehaving with female police officer](http://image.nakkheeran.in/cdn/farfuture/wcdWPumSaE_QnlHtDqJH8lzNPS7aXjelbcgaisJCNKk/1690279099/sites/default/files/inline-images/999_181.jpg)
ஒருகட்டத்தில், சற்குணத்தின் செயலால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் உடனடியாக அங்கிருந்து தப்பித்து வந்துள்ளார். மேலும், அவருடன் பணிரியும் மற்றொரு காவலரை அழைத்து அங்கு நடந்ததைக் கூறிக் கண் கலங்கியுள்ளார். இதையடுத்து, அடுத்தநாள் காலை ஆயுதப்படை காவலர் சற்குணம் மீது திருவாரூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் அந்தப் பெண் காவலர் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில், இச்சம்பவம் குறித்துக் காவலர் சற்குணம் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கடைசியில், அந்தப் பெண் காவலருக்கு சற்குணம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆயுதப்படைப் பிரிவு காவலரான சற்குணத்தை சஸ்பெண்ட் செய்து, அதிரடியாக உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி, சற்குணம் மீது பெண்ணைத் துன்புறுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர். பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.