
'மனுசாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று (24.10.2020) நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு, ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, 'மக்கள் அதிகாரம்' வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான திருமாவளவன், மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையினை திரித்து, அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசவில்லை என்பது தெரிந்தே அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. இது அவர்களின் வழக்கமான பாணியாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது.
பெண்களை மிக இழிவாகப் பேசுவதும் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஹத்ராஸ் படுகொலை நிகழ்வில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது தேசத்துரோக வழக்கைப் போட்ட இந்த பாசிஸ்டுகளுக்கு திருமாவளவனைப் பற்றி பேசுவதற்குக் கொஞ்சமும் அருகதை இல்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுத்துள்ள, 'மனு சாஸ்திரத்தைத் தடை செய்'ய வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபெறுகிற போராட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனைத்து இடங்களிலும் கலந்துகொள்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.