வருகிற கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேளாண்மை பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான பள்ளி கல்வித் திருவிழா இன்று மாலை நடந்தது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் தலைமை வகித்தார். இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்று கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
"நம் பள்ளி மாணவர்களின் கலைத்திறனை பார்த்து வியந்து போனேன், மாணவ மாணவிகள் தங்கள் உணர்வுகளை நுணுக்கமாக கலை மூலம் வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்தனர். அடுத்த ஆண்டு பாட திட்டத்தில் வேளாண்மை குறித்த பாடத் திட்டம் உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் தனியார் பள்ளிகளுக்கு இணையான புதிய சீருடைகள் அரசு பள்ளியில் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும். ப்ளஸ்டூ மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் ப்ளஸ்டூ முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவில் தேர்வு பெற்று மருத்துவர்கள் ஆவார்கள்.
ப்ளஸ்டூ முடித்தவுடன் பட்டையகணக்காளர் படிப்பு படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கு 500 பட்டய கணக்காளர்களை கொன்டு 25 ஆயிம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். கலை பண்பாட்டை காக்க இனி வரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு யோகா கற்று கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல முயற்சி நின்றாலும் மரணம் போலத்தான் ஆகவே மாணவர்கள் தொடர் முயற்சிகள் மூலம் அவர்களது வாழ்க்கை மேம்படும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும்" எனப் பேசினார்.
நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்..
"அடுத்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் வேளாண்மை, தோட்டக்கலை, டூரிசம், மற்றும் பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட தொழில் சார்ந்த கல்வி கற்றுத் தர பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது இதில் எந்த வகை தொழில் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து ஒரு மாதத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்" என்றார்.
இக்கலைத் திருவிழாவில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர் பிரிவில் சாம்பியனாக திருநெல்வேலி மாவட்டம் முதலிடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடமும் பெற்றன. இதேபோல் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்பு மாணவர் பிரிவில் சாம்பியனாக தஞ்சாவூர் மாவட்டம் முதலிடம், திருவள்ளூர் மாவட்டம் இரண்டாமிடம், திருநெல்வேலி மாவட்டம் மூன்றாம் இடமும் பெற்றன.
இந்நிகழ்ச்சியில் மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன், எம்பி சுந்தரம், எம்.எல்.ஏக்கள் பொன் சரஸ்வதி.பாஸ்கர், ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
Published on 31/08/2018 | Edited on 31/08/2018