மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கும் பலன் இருக்கிறது என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மேகதாது அணை தொடர்பாக தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. தமிழகத்தை சகோதர மாநிலமாகவே நாங்கள் கருதுகிறோம். காவிரி விவகாரத்தில் எத்தனை ஆண்டுகள் இரு மாநிலங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியும் நாம் சகோதரர்கள். மேகதாதுவில் உடனே அணை கட்டி விட முடியாது அதற்கு ஏராளமான வரைமுறைகள் உள்ளன.
தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. கர்நாடக மக்களுக்கு குடிநீர் தர வேண்டியது எங்கள் கடமை எனவே அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம். மேகதாது திட்டம் கர்நாடகாவைவிட தமிழகத்திற்கே அதிக பலனளிப்பதாக இருக்கும்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவில் 6 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. மேகதாது திட்டம் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு அதிக பயன் அளிப்பதாக இருக்கும் என்பதை மேகதாது அணை கட்டுவதற்கான திட்டங்களை வகுத்த பின் தமிழக அரசு அதை உணர்ந்து கொள்ளும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் 67 டிஎம்சி நீரை சேமிக்க முடியும் என கூறினார்.