Skip to main content

கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி கைது!

Published on 20/02/2021 | Edited on 21/02/2021

 

MAIN ACCUSED ARRESTED POLICE THANJAVUR DISTRICT COURT

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபவாசத்திரம் காவல் சரகம் வெளிவயல் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சாவுடன், மீன்பிடிப் படகும் பிடிபட்டது. அப்போது படகு உரிமையாளர் கீழத்தோட்டம் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த பிரபல கஞ்சா கடத்தல் வியாபாரி, சிலோன் சேகர் என்கிற சேகரை கடந்த நான்கு மாதங்களாக நாகப்பட்டினம் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் சேகர் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நேற்று (19/02/2021) துணைக் காவல் கண்காணிப்பாளர் பரத் சீனிவாஸ் மற்றும் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் சென்னை சென்று அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை இன்று (20/02/2021) தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறையில் அடைத்தனர். 
 

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிலோன் சேகர், ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
 

கஞ்சா கடத்தல் வியாபாரி சேகரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்ஃபோன் எண்களை ஆராய்ந்த போது, அவருடன் கஞ்சா கடத்தலில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவில் சிறப்புத் தனிப்படையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்