மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடம் அருகே பிரபல ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு தீபாவளியை முன்னிட்டு மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார்களில் புதிய துணிகள் எடுக்க அதிகளவு மக்கள் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக வந்ததுடன் அவர்கள் வந்த கார்களை வைகை ஆற்றுக்குள்ளும், வைகை ஆற்றில் கரையிலும் புதிதாக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்து நிறுத்தி உள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வைகை ஆற்றை வாகன நிறுத்தமாக்கியது குறித்து மதுரை மாநகர காவல்துறைக்கு புகார் சென்றதும் , தல்லாகுளம் போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைகை ஆற்றில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதித்ததுடன், ஜவுளிகடை ஊழியர்களை அழைத்து எச்சரித்தார். வாடிக்கையாளர்கள் கார்களை நிறுத்தியதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றனர்.
சம்மந்தப்பட்ட ஜவுளிகடை சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக திறந்த போது வைகை ஆற்றில் வாகன நிறுத்தம் ஏற்படுத்தியதால் பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து கார்கள் வைகை ஆற்றில் செல்ல முடியாத வகையில் குழி தோண்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.