வாங்கிய கடனை கஜாபுயலால் பாதித்து தினசரி வாழக்கையை நகர்த்தவே முடியாமல் சிரமப்படும் மக்களிடம் கடனை திரும்ப செலுத்த சொல்லி மிரட்டியதால் கட்டிட கூலித் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் சூரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட கூலித் தொழிலாளி வீரமணி (37). இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிராம விடியல் வங்கி என்ற நுன்கடன் நிதி நிறுவனத்திடம் ரூ 30 ஆயிரம் ரூபாய் வீரமணி கடன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கஜாபுயல் பாதிப்பு காரணமாக, வேலையில்லாமல் பெற்ற கடனை வீரமணியால் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலைதான் திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகம் கஜாபுயல் பாதிக்கப்பட்டதை மனதில்கொண்டு, நுன்கடன் மூலமாக பெற்ற கடன்கள் ஆறு மாதத்துக்குப் பிறகு திருப்பி செலுத்தலாம் என கால அவகாசம் வழங்கியது.
ஆட்சியரின் உத்தரவை பொருட்டாக கொள்ளாத கிராம விடியல் என்கிற நுன்கடன் நிறுவனத்தின் அதிகாரிகள் வீரமணியையும் மனைவி ராதிகாவையும் தகாத வார்த்தையில் திட்டி காவல்துறையை கொண்டு இருவரையும் கைது செய்து சிறையில்அடைப்போம் என கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீரமணி இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த வீரமணியை அவரது மனைவி ராதிகா மற்றும் அருகில் உறவினர்கள் மீட்டு அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி உயிரிழந்தார்.
இச்சம்பவம் பெரும் சோகத்தை சூலமங்கலம் கிராமத்தில் மட்டுமின்றி கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் வீரமணியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவரது மனைவி ராதிகா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருக்குவளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.