![madurai police incident cctv video](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pfg6G_h4SH1rs40oj58HoiOrPA1PE_38bQ3xDCPHCFM/1666706261/sites/default/files/inline-images/n21698.jpg)
மதுரையில் பூ விற்ற பெண்ணிடம் பணத்தைப் பறித்துக்கொண்டு ஓட முயன்ற இளைஞரை போலீசார் சினிமா பட பாணியில் துரத்திச் சென்று பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரயில் நிலையம் எதிரே டவுன்ஹால் பகுதியில் சாலை ஓரமாக பல்வேறு கடைகள் உள்ள நிலையில் பூக்கடைகளும் அந்தப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் பெண் ஒருவர் வைத்திருந்த பூக்கடைக்கு வந்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஷேக் மற்றும் அருண் ஆகிய இரண்டு பேரும் அவரிடம் இருந்து பணத்தை வழிப்பறி செய்துகொண்டு ஓட முயன்றனர்.
இதனால் அப்பெண் கூச்சலிட்டார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் ஆய்வாளர் காசிராஜன் மற்றும் தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் உடனடியாக ரோந்து வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு பணத்தைத் திருடிக்கொண்டு ஓடிய நபரை ஓடிச்சென்று பாய்ந்து பிடித்தனர். திருடப்பட்ட பணம் உரிய பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.