நீதிமன்றங்களில் கேள்விகளுக்குத் துறைச் செயலாளர்கள் தான் பதிலளிக்க வேண்டும் என்று அனைத்துத் துறைச் செயலாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜெயராமன், தனது பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தும், தனக்குப் பதவி உயர்வு வழங்கவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் அதில் அந்த பட்டியலில் 41 துணை ஆட்சியர்களின் பெயர்கள் இருந்தும் 10 பேருக்கு மட்டும்தான் பதவி உயர்வு அளிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனுவின் விசாரணையின் போது, பதவி உயர்வு பட்டியலிலிருந்தால் பதவி உயர்வு கொடுக்க வேண்டியது கட்டாயம் ஒன்று இல்லை என்று கூறி வழக்கைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.
இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உரிய அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், பொதுத்துறையின் பிரிவு அதிகாரி பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொதுத்துறையின் பிரிவு அதிகாரி அளித்த விளக்கத்தில் உரியப் பதில் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் பதில் அளித்திருந்தால் உரிய விவரங்கள் கிடைத்திருக்கும் என்று கூறிய நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் கேள்வி எழுப்பும் போது, சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்களோ அல்லது துறைத் தலைவர்களோ பதிலளிக்க அனைத்து துறைக்குச் சுற்றறிக்கை அனுப்பும்படி கூறி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கின் விசாரணை வரும் 30 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.