உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மனிதர்களை தாக்கி அழித்து வருகிறது. மனித உயிர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது, பட்டினி சாவுகள் தொடங்கியுள்ளது. மற்றொரு பக்கம் விவசாயிகளை வாழவைக்கும் கால்நடைகளை லம்பி வைரஸ் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மாடுகளை 'லம்பி வைரஸ்' தாக்கி கால்நடைகளின் உடல் முழுவதும் பெரியம்மை போன்ற பெரிய பெரிய கொப்புலங்கள் ஏற்பட்டு புண் ஏற்படுகிறது. இதனால் கால்நடைகள் வலியால் அவதிப்படுகிறது.
வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு இந்த வைரஸ் தாக்குவதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த முகாம் அமைத்து இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டிய கால்நடை மருத்துவர்கள், ஒரு தடவைக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கின்றனர். பல நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனவே, கரோனாவைப் போன்று அதிதீவிரமாக மாடுகளைத் தாக்கி வரும் இத்தகைய வைரஸை கட்டுப்படுத்தவும், கால்நடை மருத்துவர்களின் வசூல் வேட்டையை தடுக்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை பராமரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கரோனா காலத்தில் வாழ்வதாரமாக அமைந்தது பால்மாடுகள். இப்போது அந்த பால் மாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் வேதனையாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.