கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது 19 வயது மகள், இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென்று காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு மகளைக் கண்டுபிடித்து தருமாறு புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணும் உறையூர் பலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது பாலமுருகன் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும், நண்பர்கள் உதவியுடன் மயிலம் முருகன் கோவிலுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இந்த தகவல் தெரிந்த இரு வீட்டு உறவினர்களும் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். காவல் நிலையம் முன்பு இரு வீட்டு உறவினர்களும் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குறித்து ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டனர்.
காவல் நிலையம் எதிரே காதலர்கள் வீட்டு உறவினர்கள் அடிதடியில் இறங்கியதைப் பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடம் புதுப்பேட்டை காவல் நிலையம் முன்பு பரபரப்பானது. போலீசாரின் பேச்சு வார்த்தையை அடுத்து இருதரப்பினரும் கோபம் தணிந்து கலைந்து சென்றனர்.