தமிழ்நாடு முழுவதும் கடந்த 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசுப் பள்ளி, அங்கன்வாடி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகங்கள் மட்டுமின்றி தொகுப்பு வீடுகள் உட்பட மேற்கூரைகள் உடைந்து, தண்ணீர் கசிந்து, சுவரெங்கும் மின்சாரம் பாயும் அபாய நிலையில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் உள்ளன. இதனால் அந்தக் கட்டடங்களுக்கு கீழே இருந்து வேலை பார்க்கவே உயிர் பயத்தோடு திக் திக் மனநிலையில் வேலை செய்கிறார்கள்.
அதேபோலத்தான் புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஏராளமான கட்டடங்கள் உள்ளன. புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் ஊராட்சி மட்டையன்பட்டி கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடியில் சுமார் 20 குழந்தைகள் சேர்க்கப்பட்டு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரையின் சிமென்ட் பூச்சுகள் உடைந்து தலையில் கொட்டுவதுடன் மழைத் தண்ணீரும் கீழே இறங்கி தரையெல்லாம் தண்ணீர் நிரைந்து வழுக்கி விழுகிறார்கள் சிறுவர்கள்.
சுவர்களும் மழையால் நனைந்து மின்கசிவு ஏற்படும் நிலையில் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அச்சத்துடன் அனுப்புகின்றனர். பல குழந்தைகளின் பெற்றோர் கட்டடம் மோசமாக உள்ளது, குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு இதுபோன்ற மோசமான கட்டடங்களை ஆய்வுசெய்து, மராமத்து செய்தால் விபத்துகளைத் தடுக்கலாம். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அச்சமின்றி அனுப்புவார்கள்.