கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்குட்பட்ட முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த பார்வதி(14) பெயர்மாற்றப்பட்டுள்ளது. இவர் சிதம்பரம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சிதம்பரம் காவல்துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடி பார்வையில் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் இரு தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.
இந்தநிலையில் விருத்தாசலம் தாலுக்கா பூதாமூரை சேர்ந்த சீனுவாசன் மகன் செல்வக்குமார்(29) மாணவியை காதலிக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு அழைத்துச்சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இவர்களின் செல்போன் மூலம் அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து ஈரோடு, கோயமுத்தூர், சென்னை மற்றும் அரியலூர் பகுதியில் தேடிய நிலையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்டதை அறிந்து அவர்களை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர். விசாரணையில் சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்றதாக தெரியவந்ததால் செல்வக்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த செல்வக்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் இரு பெண்களை திருணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.