Skip to main content

முதல்வர் வேட்பாளர்கள் தொகுதியில் பதிவான வாக்குகளின் சதவீதம் வெளியீடு!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

Percentage of registered voters in the constituency of star candidates!

 

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (06/04/2021) நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. நேற்று காலை 07.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 07.00 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88,937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தலில் 3,585 ஆண் வேட்பாளர்கள், 411 பெண் வேட்பாளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அதிகபட்சமாக கரூர் சட்டமன்றத் தொகுதியில் 77 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 31 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

 

இந்நிலையில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளில் மொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 87.33 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52 சதவீத வாக்கும் பதிவாகியுள்ளது. முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6 சதவிகிதமும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்கும் பதிவாகியுள்ளது. ஓபிஎஸ் போட்டியிடும் போடியில் 73.65 சதவீதமும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீதமும், கமல் போட்டியிடும் கோவை தெற்கில் 60.72 சதவீதமும், டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டியில் 67.43 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

தமிழகத்தில் வாக்குப்பதிவு அதிகம் பெற்றுள்ள முதல் 5 தொகுதிகள்: பாலக்கோடு - 87.33 சதவீதம், குளித்தலை - 86.15 சதவீதம், எடப்பாடி - 85.6  சதவீதம், வீரபாண்டி - 85.53 சதவீதம், ஒட்டன்சத்திரம் - 85.09 சதவீதம்.

 

 

சார்ந்த செய்திகள்