வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவர் தனது காரில் வேப்பம்பட்டு கிராமத்தில் இருந்து வேலூர் மாநகருக்கு வந்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் வேலூர்- காட்பாடியை இணைக்கும் பாலாற்று பாலத்தின் மேல் கார் வந்து கொண்டிருந்த போது, காருக்கு பின்னால் வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.
லாரி மோதிய வேகத்தில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் கார் ஒரு குலுங்களோடு மணலில் நின்றது. இதனைப்பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடிச்சென்று பார்த்தபோது, காருக்குள் இருந்த ஓட்டுநர், ராஜேஷ் இருவரும் எந்தவித காயமுமின்றி கீழே இறங்கி பதட்டத்துடன் வந்துள்ளனர். வாகன ஓட்டிகள் அவர்களுக்கு குடிக்க தண்ணீரை தந்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.
இதுப்பற்றி ராஜேஷ்கண்ணன், விருதம்பட்டு காவல்நிலையத்துக்கு தகவல் தந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கணியம்பாடியை சேர்ந்த ரவி என்பவர் தான் செங்கல் லாரி ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் எதிர்பாராமல் நடைபெற்ற விபத்தா? அல்லது திட்டமிட்டு நடந்ததா? என்ற கோணத்தில் ஓட்டுநர் ரவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.