தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில், மாவட்டச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அக்கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில், ‘தமிழகத்தில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய் வேண்டும். அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பு வேண்டும். கரோனா தொற்று நோயால் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் ரூ.50 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குதல் வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஊதிய நிறுத்தம் உள்ளிட்ட பயன்களை உடனே வழங்க வேண்டும். சேவை துறைகளை பலப்படுத்துதல். ஊழியர்களின் அதிக பணிச்சுமையைபோக்க தேவையான ஊழியர்களை அவசரமாக நியமனம் செய்ய வேண்டும். அனைத்து தற்காலிக, ஒப்பந்த, மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சத்தியவாணி, புள்ளியல் துறை மாநில பிரச்சார செயலாளர் பால்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.