நாட்டில் 75 லட்சத்திற்கு அதிமான சரக்கு லாரிகள் இயங்கிவருகின்றன. ஆனால் தொடர்ந்து டீசல் விலை உயர்வு, காப்பீட்டு தொகை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு போன்ற காரணங்களால் லாரி போக்குவரத்து தொழில் முற்றிலும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லாரி போக்குவரத்து தொழிலை முடக்கும் இதுபோன்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்ற பல கோரிக்கைகளுடன் நாடு தழுவிய லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். மேலும் டீசலை ஜி.எஸ்.டிக்கு கீழ் கொண்டுவந்தால் லிட்டருக்கு 20 ரூபாய் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆலோசனை தெரிவித்தனர்.
ஆனால் தற்போது எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று முதல் லாரி வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நாடு தழுவிய லாரி வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சம்மெளனம் நிர்வாகிகளின் ஆலோசனைப்படி இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மட்டும் இந்த லாரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என அறிவித்துள்ளது.