![Lorry owners besieged PWD office](http://image.nakkheeran.in/cdn/farfuture/hYZlMhvYjqfxjte1zFi2t4SYSv4efALgsYg68zsQ8zI/1698992635/sites/default/files/inline-images/th_4908.jpg)
கூடுதல் மணல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் அதிக எண்ணிக்கையிலான புதிய மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும். இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் தட்டுப்பாடின்றி தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு மணல் விற்பனை கிடங்கில் அதிகளவில் மணல் இருப்பு இருந்தும் இயக்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ள குன்னம், மங்களம், கந்தனேரி ஆகிய விற்பனை கிடங்குகளை இயக்கிட வேண்டும். மணல் அள்ள வரும் லாரிகளுக்கும், ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மணல் குவாரிகளுக்குத் தனியாகத் திட்ட இயக்குநரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கூடுதல் குவாரிகள் அமைக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.