நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த திருவிழா இன்று வரை நடைபெறுகிறது. இன்றிரவு 8 மணிக்குப் பெரிய தேர்பவனி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாகை மாவட்டத்துக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “வேளாங்கண்ணி பேராலய திருவிழா நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்டம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்ய வருகிற 23 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் விதமாக மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.